Live Free Sun TV Online

சனி, 19 நவம்பர், 2011

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு எகிறியது பஸ் கட்டணம்





தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ்கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அதிகரித்துள்ள புதிய பஸ் கட்டண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெ.,நேற்று மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பஸ்கட்டண உயர்வை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கிய ஊர்கள் அனைத்திற்கும் பஸ் கட்டணம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. முன்பு குறைந்த கட்டணம் ரூட் பஸ்களில் 5 ரூபாயாக இருந்தது. இது 6 ரூபாய், ஏழு ரூபாய் என்கிற அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக்நகருக்கு 5 ரூபாய் கட்டணம் பெறப்பட்டது. ஆனால் தற்போது 2 ரூபாய் அதிகரித்து 7 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே சமயம் தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு 5 ரூபாய் பழைய கட்டணம் இருந்தது. தற்போது 6 ரூபாய் உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக்நகர் மற்றும் புதுக்கோட்டை இரண்டும் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். இந்த இரண்டிற்கும் இடையே கட்டண வித்தியாசம் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. டவுன் பஸ்களிலும் தூத்துக்குடியில் இருந்து பஸ் கட்டணம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியை பொறுத்தமட்டில் டவுன்பஸ்களில் எல்.எஸ்.எஸ், எக்ஸ்பிரஸ், எஸ்.எல்.எப் என்ற மூன்று வகையான டவுன்பஸ்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு ஸ்டேஜ்ற்கு 3 ரூபாயாக இருந்தது 4 ரூபாயாகவும், 4 ரூபாயாக இருந்தது 5 ரூபாயாகவும், 5 ரூபாயாக இருந்தது 7 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து புதிய துறைமுகத்திற்கு தற்போதைய கட்டணமாக 7 ரூபாய், 9 ரூபாய், 13 ரூபாய் என்ற மூன்று அளவில் கட்டணம் உள்ளது. உயர்த்தப்பட்ட புதிய பஸ் கட்டணத்தின் படி முள்ளக்காட்டிற்கு 9 ரூபாய், ஏரலுக்கு 15 ரூபாய், செக்காரக்குடிக்கு 15 ரூபாய், ஆத்தூருக்கு 19 ரூபாய், புன்னக்காயலுக்கு 21 ரூபாய் என்று கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்.எஸ்.எஸ், எக்ஸ்பிரஸ் பஸ்களில் இதனை விட குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்.எஸ்.எஸ் டவுன் பஸ்களில் குறைந்த கட்டணம் 4 ரூபாய் அதிகப்பட்ச கட்டணம் 21. ஸ்டேஜ்ற்கு 13 ரூபாய் என்றும், எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு குறைந்த கட்டணம் 5 ரூபாய் அதிகப்பட்ச கட்டணம் 18 ரூபாயாகவும், எஸ்.எல்.எப் பஸ்களுக்கு குறைந்த கட்டணம் 7 ரூபாய் அதிக கட்டணம் 25 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பால் விலையும் உயர்ந்தது பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. கால் லிட்டர் பால் 7 ரூபாயாக விற்பனை செய்தது 10 ரூபாயாக உயர்ந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை: