ஏரல் பஸ்நிலையத்தில் ரோடுகள் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஏரல் பஸ் நிலையத்தில்
அடிப்படை வசதி அறவே இல்லை
ஏரல், நவ. 15:
ஏரல் பஸ் நிலையம் அடிப்படை வசதிகள் அறவே இன்றி, நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
து�த்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்குவது ஏரல் பேரூராட்சி. வியாபாரம், தொழில் நிமித்தம் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் ஏரல் வந்து செல்கின்றனர். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி, ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாட சுவாமி, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் என எண்ணற்ற புகழ்பெற்ற ஆன்மீக தலங்களும் பக்தர்களின் வருகையை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.
அருகில் வனதிருப்பதி, நவதிருப்பதி கோயில்கள் மற்றும் நாலுமாவடி தேவாலயங்கள் போன்றவற்றிற்கு மாதம் தோறும் நூற்றுக்கணக்கில் விழாக்கால சிறப்பு பஸ்கள் ஏரல் வழியாக இயக்கப்படுகின்றன.
ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400க்கும் மேற்பட்ட தடவை வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் கூட்டத்துக்கு பஞ்சமே இல்லாத இடமாக பஸ் நிலையம் உள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது வணிக நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே உள்ளது. மழை, வெயில் எதுவானாலும் பயணிகள் ஒதுங்குவதற்கு நிழற்கூரை கூட முழுமையாக இல்லை. அற்பசொற்பமாக பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கடைகளாக மாறிவிட்டன. பஸ்கள் நிற்கிறதோ இல்லையோ வாடகை கார்கள் அணிவகுத்து நிற்பதை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
மெயின்ரோட்டை விட பஸ்நிலைய உட்புறம் பள்ளமாக இருப்பதால் சிறுமழை வந்தால் கூட தெப்பக்குளமாக மாறிவிடுகிறது. பஸ் நிலைய சிமெண்ட் சாலைகள் எல்லாமல் பெயர்ந்து பாதாள குழிகளாக மாறி விட்டன. சாலையில் பெயர்ந்த கான்கிரீட் கம்பிகள் பயணிகளின் கால்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. குடிநீர் வசதி, இலவச கழிப்பிடம், கட்டண கழிப்பிடம் என அவசர தேவை எதுவுமே இங்கு கிடையாது.
இதனாலோ என்னவோ பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக்கட்டணமே வசூலிப்பதில்லை. அப்படி வசூலித்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பது தெரிந்தும் பேரூராட்சி நிர்வாகம் மவுனம் காப்பது புரியாத புதிராக உள்ளது. வருமானத்திற்கு வழிசெய்தால் பஸ் நிலைய பராமரிப்புக்கும், மேம்பாட்டுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு புகார்கள் பறந்தும் நடவடிக்கை என்பது கானல் நீராகவே உள்ளது.
ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, �ஏரல் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மகாத்மாகாந்தி பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் பஸ்நிலையத்திற்குள் நிறுத்த அனுமதி இல்லை என விளம்பர போர்டுகள் வைத்துள்ளோம்.
மீறி நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பஸ் நிலையத்தை நவீனப்படுத்தவும், இங்குள்ள வணிகவளாகத்தை புதுப்பித்து கட்டவும், பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டவும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் விரைவில் ஏற்படுத்தும் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறோம்� என்றார்.
வணிக நகரம் வளர்ச்சியை இழக்கிறது
ஏரல் பஸ்நிலையத்தில் உள்ள சிமென்ட் ரோடு பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.